தினமணி 16.05.2010 தேதிய ஞாயிறு தமிழ் மணியில் கலாரசிகன் பார்வையில் இருந்து…
பத்திரிகையாளர், நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பெரியவர்களையும், குழந்தைகளையும் பார்க்கப் போகும்போது வெறும் கையோடு போகக்கூடாது என்பார்கள். அதேபோல, பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திக்கச் செல்லும்போது, கூடவே தங்களது படைப்புகளையும் எடுத்துக்கொண்டுதான் போகவேண்டும் என்பார் எங்கள் ஆசிரியர் “சாவி’ சார்.
“என்ன சார், கதை, கட்டுரை எதுவும் இல்லாமல் வெறுங்கையோடு வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேவிடுவார். மஞ்சரி, ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றியிருக்கும் செங்கோட்டை ஸ்ரீராமுக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனக்குப் பரிசளிக்க அவர் எழுதிய “மறந்துபோன பக்கங்கள்’ புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார்.
படைப்பாளிகள் தங்களது புத்தகங்களை இன்னொருவருக்குப் பரிசளிக்கும்போது தவறாமல் அதில் தங்களது கையெழுத்தைப் பதிவுசெய்துகொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதை இன்னொருவர் இரவல் கேட்கும்போது மறுக்க முடியாமல் போய்விடுகிறது. ஸ்ரீராம் கையெழுத்துப் போடாமல்தான் தனது புத்தகத்தை எனக்குத் தந்தார் என்பதைக் குத்திக்காட்ட இதைச் சொல்லவில்லை. இதுவே மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கட்டுமே என்கிற நல்லெண்ணம்தான் காரணம்.
“மறந்துபோன பக்கங்கள்’ புத்தகத்தை சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் அமர்ந்து படித்து முடித்தேன். இந்த இளைஞர் என்னவெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அற்புதமான பல செய்திகளை உள்ளடக்கிய அந்தத் தகவல் களஞ்சியத்தை மீண்டும் ஒருமுறை படித்துக் குறிப்பெழுதிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சி என்று அழைக்கப்படும் வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாளுக்கு அவரது கணவர் இறந்துபோன செய்தி தெரிவிக்கப்படவே இல்லையாம். சொன்னபோது அவர் நம்பவும் இல்லையாம். கடைசிவரை சுமங்கலியாகவே வாழ்ந்து மறைந்தாராம் அந்த அம்மையார். அதுமட்டுமல்ல, நாட்டுக்காக உயிர் துறந்த மாவீரன் வாஞ்சிநாதனிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஆண்டுதோறும் தீபாவளிக்குப் புடவை எடுத்துக்கொண்டு போய் சமர்ப்பித்து, பொன்னம்மாளின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசிபெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாராம்.
கம்பனையும், வால்மீகியையும், ஆழ்வார்களின் பாசுரங்களையும் ஸ்ரீராம் கரைத்துக் குடித்திருக்கிறார் என்றால், சமூக நடைமுறைகளை அவர் இலக்கியங்களை உவமைகாட்டி சாடும், பிரச்னைகளுக்குத் தீர்வுகூறும் பாங்கு பலே… பலே…
மும்பையிலுள்ள “கேட் வே ஆஃப் இந்தியா’வைப் பார்க்கும் போதெல்லாம் என் மனது இதுவொரு அடிமைச்சின்னம் என்று சினமடையும். 1911-இல் தில்லி தர்பாருக்குச் செல்ல வந்திறங்கிய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், ராணியும் இந்த வழியாகத்தான் இந்திய மண்ணில் நுழைந்தனர். அதேபோல, சுதந்திர இந்தியாவிலிருந்து ஆங்கிலப் படைகளின் கடைசிப் பட்டாலியன் இதே வழியாகத்தான் 1948-இல் வெளியேறியது. எனக்கு இருக்கும் அதே உணர்வை செங்கோட்டை ஸ்ரீராமும் பிரதிபலித்திருப்பது நெகிழவைத்தது. எல்லாம் சரி ஸ்ரீராம்… கான கந்தர்வன் எஸ்.ஜி.கிட்டப்பா பற்றிய ஒரு தகவல் விடுபட்டுப் போயிருக்கிறது. அவர் முறையாக சங்கீதம் கற்றவர் அல்ல. எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இயற்கையாகவே ராக ஆலாபனைகள் அபாரமாக வருமே தவிர, ஸ்வரம் பாடத்தெரியாது. தமது பிருகாக்களின் ராக சாரங்களை அவர் பிழிந்தெடுத்துத்தர, அதை அவரது நண்பர் நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளைவாள் வாசித்து அசத்துவாராம். அதுதான் “சிங்கார வேலனே தேவா…’ பாடலுக்கு அடிப்படை.
செங்கோட்டை ஸ்ரீராமின் பிரமிக்கவைக்கும் பல பரிமாணங்களை “மறந்துபோன பக்கங்கள்’ என்னில் மறக்கவே முடியாதபடிபதிவுசெய்துவிட்டிருக்கிறது.