
நிலப்பயிரை அழிக்குமென்று
விலங்குவரு மார்க்கம்- வெடி
ஒளித்து,கனி பொறியமைத்தல்
ஒத்திடுமோ யார்க்கும்? .
களைத்ததனால் இரைதேடி
கண்டவுடன் உண்ண ,
தாடைவாய் சிதறிற்று
தாங்காவலி பண்ண. (01)
வெடிச்சத்தம் மதம்போட்டும்;
வெறியேற்றும் நிலைமாற்றும்.
“பிடி”யாம் யிச்சூலானை
அடிவயிற்று சூடெண்ணி
பொடிநடையாய் “வெள்ளி” நதி
போய்நின்றது அளவாய்.!
கொடியார்கால் படும்பூமி
குணம்விட்ட பொருளாய்!! (02)
இருந்தாலும் இறந்தாலும்
யானைக்கு ஆயிரம்பொன்.
இருந்தாலே காசுபெறா
இழிநிலையில் மனிதன்.
பொருந்துகிற உயர்நீதி
யானைக்கு யார்தருவார்?
திருந்தாத ஜென்மங்கள்
திருந்துதற்கு ஏதுவழி?? (03)
விண்ணிணத்து தேவரன்ன
விடிகாலை கோவில்தொறும்
பண்ணிசையில் “சிலை” வலத்து
பணிசெய்யும் பிளிறலினம்,
தண்ணினத்து பெண்ணினம்
துடிதுடித்து மாண்டதற்க்கு
மண்”பதர்கள்” எதிர்துடிப்பை
பிரார்த்தனையாய் வேண்டிற்று.(04)
வாமணன்மண்! “மழு”ராமன்
வடித்தெடுத்த எழில்பூமி!!
தூமனத்து மாபலிக்கும்
சொர்க்கமீந்த பொன்னுலகு!
தாமதிக்கும் ; உறுநீதி
தாராமல் போகாது.
தீமனத்தார் பெருந்தீங்கின்
தண்டிப்பை உடன்காட்டும்!! (05)
- ஆக்கம்: கவிஞர் கண்ணன் திருமலை அய்யங்கார்