
தமிழின் நவீன இலக்கியத்தில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், திறானாய்வு போனற துறைகளில் சோதனயும், சாதனையும் படைத்த எழுத்தாளர் டி.கே.துரைசாமி என்னும் நகுலன்.
அவர் எழுதிய புதுக்கவிதை…
“அணைக்க ஒரு
அன்பில்லாத மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லாத வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லா தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை”
அவர் 1921 ஆண்டில் கும்பகோணத்தில் பிறந்தவர். கும்பகோணம் “Oxford of South India” என்று பேசப்பட்ட இலக்கிய மகாமகம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலப் பட்டம் பெற்றுத் திருவனந்தபுரத்தில் மார் இவானீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
அவர் ஒரு படைப்பு எழுத்தாளர். அவரின் ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மையும், புதுமையும் நிறைந்தது. 2007ஆம் ஆண்டில் மரணம் அடையும் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர். அவர் எழுத்தின் மீதும், வாழ்க்கை மீதும் நம்பிக்கை வைத்து இறுதி மூச்சு வரை உறுதியோடு எழுதியவர்.
நவீன கவிதை, கட்டுரை, கதைகள் கொண்ட தொகுப்பைக் “குருஷேத்திரம்” என்னும் தலைப்பில் 1968ஆம் ஆண்டில் வெளியிட்டார். இது அனைவரின் கவனத்தைப் பெற்றது. புதிய எழுத்தாளர்களை அடையாளப்படுத்திய தொகுப்பு.
நகுலன் ஏழு நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது நினைவுப்பாதை நாவல். இது கதை சொல்லும் நாவல் இல்லை; வாழ்க்கையைப் பற்றிப் பேசும் படைப்பு. நகுலன் இலக்கியவாதிகளின் எழுத்தாளராக இருந்தார் என்பதே அவரின் தனிச்சிறப்பு.

நினைவுப்பாதை வாழ்க்கை என்னும் கருத்தை வாழ்கின்ற மனிதன் மூலம் சொல்லுகிறது… என்றும் படிக்க வேண்டிய படைப்பு.. விளம்பர உலகத்தில் அசல் எழுத்துக்கள் ஒதுக்கப் பட்டாலும் போலி எழுத்துக்களை ஒழித்து விட்டுக் காலம், காலமாக நிரந்தரமாக இருப்பது அசல் எழுத்துக்கள் மட்டுமே. இதுவே உலகின் இலக்கியச் சரித்திரமாக இன்றும் இருக்கிறது.
நகுலன் புதுக்கவிதைப் படைப்பில் அறியப்பட வேண்டியவர். அவர் ஓசை நயத்தோடு வாழ்வின் தத்துவதை இரண்டு சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
நான் கவிதை பற்றிப் படிக்கும் போது “Diction is the poetry” என்று படித்தேன். இக்கவிதையில் சொல்லாட்சியே கவிதை என்பதை அறிந்து கொண்டேன்.
நம் வாழ்க்கை முறை அந்நியப்பட்டு வருவதைச் சொல்லும் கவிதை..
“ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை”
- நகுலனின் கவிதை வரிகள்:
இந்தியத் தத்துவவியலின் மாயா வாதத்தை நகுலனின் கவிதைகளில் காணலாம். “காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ” என்ற மகாகவி பாரதியைப் போல் நகுலன் வாழ்தல், மறைதல் நிகழ்வுகளைத் தத்துவார்த்தமாய் அணுகுகிறார்.
இருப்பதெற்கென்றுதான்
வருகிறோம்…
இல்லாமல் போகிறோம் – எனும் வரிகளின் வீச்சு வாசகனின் கன்னத்தில் அறைகிறது. பாரதியின் காண்பது, மறைவது சொற்கள் போல் நகுலனின் இருப்பது, மறைவது என்ற சொற்கள் நிலையாமையை நிலையானதாய்க் காட்டுகின்றன. இந்தக் கவிதை மௌனியின் கதைகளை நினைவு படுத்துகிறது. மெய்ப்பொருள் காணும் முயற்சியில் நகுலன் கவிதைகள் வாசகனை ஈடுபடவைக்கின்றன.
சகமனிதர்கள் மீதான அக்கறை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துவரும் வேளையில் உலகியல் உண்மையை ராமச்சந்திரன் கவிதை மூலம் அதிர்ச்சியோடு காட்டுகிறார்.
அன்றாட வாழ்வின் சிறுசம்ப வத்தைக்கூடச் சமூகத்தைக் காட்டும் கண்ணாடியாக நகுலனால் மாற்றிக்காட்ட முடிகிறது. எதற்கு மற்றவர்களோடு பேசுகிறோம் என்பதை அறியாத, இயந்தரத்தனமான உரையாடல்களை நாம் மேற்கொள் கிறோம் என்பதை நகுலன் இப்படிச் சொல்கிறார். தனிமை நகுலனின் கவிவேர்.
எனக்கு
யாருமில்லை
நான்
கூட… – என்ற கவிதையைப் புரிந்துகொள்ள நெடுநேரம் தேவைப்படுகிறது.
நகுலன், நகுலனின் சாயலில் மட்டுமே கவிதைகள் எழுதினார். அவர் முகமே அவருக்குப் போதுமானதாய் இருந்தது. தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை விளம்பர மயமானதாய் நகுலன் நினைத்தார்… என்பதே அவரின் யதார்த்த நிலையை விளக்குகிறது!
- பேராசிரியர் சுபாசு சந்திரபோசு , திருச்சி