முகநூலில்
கவிதை எழுதத் தொடங்கிய பெண்ணிடம்
சிற்றிதழ்கள் பற்றித் தெரியுமா என்றார்
பிராது சொல்லியே புகழ்பெற்ற
கவிஞர்!
பதில் சொல்வதற்குள்
நான்கைந்து கவிதைகள்
சடசடவென்று வந்து விழுந்தன
உள்பெட்டிக்குள்…
சூப்பர், மகிழ்ச்சி, அற்புதம்
என்றெல்லாம் …
தன் கவிதைகளுக்கு வரும்
பாராட்டுகளால் குழம்பியிருந்தவளிடம்
அடுத்த வாரத்தின் தீவுப் பயணத்தில்
உடன் வர முடியுமா என்றார் மற்றொருவர்
உடல்நலம் சரியில்லை
கடன் வேண்டுமென்றும்
மகனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்ட பணமில்லை
உதவ முடியுமா என்றும்
உள்பெட்டியில் கோரியிருந்தனர் கவிஞர்கள்…
திகைத்திருந்தவளிடம்
குழறலான குரலொன்று…
அன்றிரவில் அவளெழுதிய கவிதையிலுள்ள
உடலை அங்கமங்கமாய் வருணித்தது
டிங்கென்றொலித்த வாட்சப்பில்
அவள் பேரழகியென்று சூளுரைத்திருந்தார் வேறொருவர்
மின்னஞ்சல், மெசெஞ்சர், டெலிகிராமென்று
ஒவ்வொன்றாய் ப்ளாக்கியவள்
தன் நிழற்படத்தை நீக்கினாள்…
வெறுமையானாள்…
நாமங் கெட்டாள்…
கருத்திட முடியாதபடிக்கு
மூன்றடுக்குப் பாதுகாப்பு வளையத்துள் நுழைந்தவள்
அரூப வளையத்தை வியந்தபடி
கவிதையொன்றைத் தட்டச்சத் தொடங்கினாள்
* பரமேசுவரி




