அழியாத தமிழ்க் காவியம்
தமிழர்கள் மனத்தில் அழியாத ஓவியம்
தமிழ்த் தாய் அஞ்சுகம் பெற்றெடுத்து
தமிழுக்கு தாரை வார்த்த தவப் புதல்வன்!
திருக் குவளை தந்த சீமான்
தமிழ் கண்ட தலைமகன்
செம்மொழி தந்த செந்தமிழன்
இலட்சம் பேர் அமர்ந்திருக்க
சிங்கமாய் மேடையில் நீ வந்தமர்ந்து கரகரத்த குரலில்
காட்டாற்றில் பிரவாகமெடுக்கும்
குற்றால அருவியாய்க்
கொட்டும் உன் அழகுத் தமிழ்ச் சொல் கேட்கும் போது
கடல் அலையாய் ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தில்
கரவொலி விண்ணைப் பிளக்குமே ..!
செவிடன்கூட
உன் செந்தமிழ் கேட்டு
செவி மடுப்பான்
உன் உவமைத் தமிழால்
ஊமையாய் இருப்பவன் கூட
உன் குரல் கேட்டு வீரம் கொள்வானே
உன்னைப் போல பேசத் துடிப்பானே
என் தலைவா
உன் குரலைக் கேட்க எத்துணை உள்ளங்கள் ஏங்கும்
கார்மேகத்தைக் கிழித்து வரும்
கதிரவனின் கதிர் வீச்சாய்
உன் வரவைக் கண்ட பின்னே
ஆர்ப்பரிக்கும் கரகோஷம்
அய்யா… மெய்சிலிர்க்கிறதே
சிங்கமாய் சீறிப்பாயும் ஆதார அறிக்கைகளைக் கண்டு
அஞ்சாதவர்களுண்டோ
அலறியவர் கோடியுண்டு
களம் பார்த்து எதிரியை வீழ்த்தி வெற்றி கொள்ளும்
சூத்திரம் அறிந்தவர் நீங்களய்யா
உமது அதிரடிப் பேச்சைக் கண்டு
இரு விழி உயர்த்தியவர் ஏராளம்
உயிரினும் மேலான
என் அன்பு உடன்பிறப்பே … என்ற
ஒரு வரிக்கு தானய்யா …
உம்மைக் காண இன்று
காவேரி வாசலில் கால்கடுக்கக் காத்துக் கிடக்கோம்
உமது வசீகர வார்த்தையால்
வீழ்ந்தவர்கள்தான் இந்த தொண்டர்கள்
அய்யா நீர் பேசியதால் தான்
நம் தமிழ் மொழி செம்மொழி என்ற அழகு பெற்றது..
என் ஆற்றலின் ஊற்றே தமிழகம் தன்மானத் தலைவா
தமிழ்த் தாய் மடியில் தலை சாய்த்து உறங்கும் நீ…
உறக்கமின்றி உன் வழிகாட்டுதல்களில்
உன் பின்னே அணிவகுத்து வந்த
உடன் பிறப்புகள் …
காத்து நிற்கிறோம் உன் அழகுத் தமிழ்க் குரல் கேட்க
எழுந்துவா ..
எழுந்து வா..
என் தலைவா
இன்று உலகில் உன் பெயர்
உச்சரிக்காதோர் உண்டோ…
இக்கட்டான காலம் உனக்கல்ல தலைவா தமிழுக்கு..
திக்..திக்..என்ற இதயத் துடிப்போடு காத்திருக்கிறோம்…
உன் குரல் கேட்க வரும்போதெல்லாம்
உன் கருணை கண் பார்வையும் கையசைப்பும்
எங்கள் கண்ணுக்குள்ளே வந்து.. வந்து போகிறதே ..
எங்கள் விழிகள் குளமாகிறதே …
வீழ்ந்த இனத்தை வீறு கொண்டு எழ வைத்தவனே
என் தலைவா ..எழுந்து வா…
விழுந்தடித்து வருகிறோம்
எங்கள் தலைவனை காண தலைநகருக்கு..
– இசக்கிராஜன்




