உள்ளம் அதனுள் கள்ளம்

Published:

tdn pic 1 - 2026

எந்த ஒன்றைச் செய்தாலும் – இவர்

ஏதோ ஒர்குறை சொல்கின்றார்

வந்த மனிதர் முன்பாக – ஒரு

வறட்டுச் சிரிப்பு உதிர்க்கின்றார்

 

அடுத்த வீட்டுக் குழந்தையிடம் – ஒரு

அயலான் போல நடக்கின்றார்

எடுத்து பணத்தை ஏழையர்க்கு – அட

ஏன்நான் தரணும் என்கின்றார்

 

பெற்ற பிள்ளை ஆனாலும் – பணப்

பித்தாய்க் காட்டிக் கொள்கின்றார்

குற்ற உணர்வே இல்லாமல் – தன்

குடும்ப உறவைப் பழிக்கின்றார்

 

செல்லும் செல்வப் பைக்குள்ளே – இவர்

சிக்கித் தவித்துக் கிடக்கின்றார்

அல்லும் பகலும் உறக்கமின்றி – உயிர்

அற்ற பிணமாய் நடக்கின்றார்

 

முற்றும் துறந்த முனிபோல – அட

முகத்துத் தாடி நரைத்தாலும்

கற்ற வித்தைக் கபடமெனில் -ஒரு

காலம் கள்ளன் பிடிபடுவான்

 

பக்தி வேடம் போடுவதால் – மனம்

பற்று விட்டு ஓடிடுமா ?

பத்தி ஏற்றி வைத்தாலும் – மன

பந்த நாற்றம் போய்விடுமா?

            கவிதை: மீ.விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img