மழைக்குக் காத்திருந்த நிலம்போல்
வறண்டு கிடந்தது என் உள்ளம்…
மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த
வசந்த காலம் வீசிச் சென்றது…
அணைகளில் தேங்கிவைத்த நீரெல்லாம்
உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின!
உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே
உணர்ச்சிப் பெருக்காய் அன்பின் ஆறு!
சொட்டுச் சொட்டாய் கண்ணில் கசிகிறது
உணர்வுகளைக் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறு!
குன்றின் மேல் நின்றுகாணும் யானைப் போர்
தெருக்களில் குரைத்துத் திரியும் நினைவுகளாய்…
உயிரிருக்க வழியுண்டு உவகைக்கு இடமுண்டு
எஜமானன் என்றொரு ஜீவனும் உண்டுதான்!
வாலாட்டும் மட்டும் வாயில்லா ஜீவனாம்நான்
நாவொடு நக்கும்வரை நன்றாய் கவனிப்பும்தான்!
எந்தப் பாவி இடையில் வந்தானோ?
கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் காலன்போலே!
சாளரத்தின் வழியேநான் சாய்ந்துபார்ப்பேன்…
சகபாடிகளின் சன்னஈனக் குரலும் கேட்பேன்…
குளிருக்குள் அடங்கிக்கொண்டு சிறைப்பட்டேன்
குதூகலிக்கும் நட்புகளின் சுதந்திரம் கண்டேன்!
எத்தனைநாள் உணர்வுப் பிழியலில் உயிர்வாழ்வது?
சாளரத்தின் உள்ளுக்குள் சமைந்து போவது?
கதிரவனின் அறுபொழுது வெய்யில் காணாமல்!
கதைபலவும் அவிழ்த்துவிட்டு வாழ்தல் தகுமோ?



