மனிதாபிமானத்தை தேடி

எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது என்னை தவிர. நான் மட்டும் கொஞ்சம்…. சரி விடுங்க. எதுக்கு வம்பு…. ரொம்ப சோம்பேறி….. காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்….

கொளுத்தும் வெயில்… அதை தாங்கும் சக்தியும் இல்லை… குளிர்சாதன பெட்டி போட்டால் ஆகும் செலவை தாங்கும் தாங்கும் சக்தி இல்லாததால்…. மின்சாரம் என்பது எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாத வேலையில்… காற்றுக்காக ஏங்கி எங்கள் வீட்டின் ஹாலில் தான் படுக்கை….

எப்பொழுதும் போல் ஒரு நாள் விடியற்காலை 5 மணிக்கு அப்பா…. அம்மா….. இங்கே வாங்க…… என்று என் சின்ன சிங்கம் கர்ஜித்தது.  பாருப்பா நம்ம ரூமுல பூனை குட்டி போட்டிருக்கு என்ற எனது மகனின் வியப்புக் குரலுடன் என் காலை பொழுது அன்று மட்டும் விடியல் காலையில் தொடங்கியது. இதை கேட்டதும் கிரிக்கெட் தவிர மற்றவற்றை பற்றி செவிசாய்க்காமல் என்னோடு தூங்கி கொண்டிருந்த என் முதல் மகனும் எழுந்தான்.

ஒன்றல்ல…. இரண்டல்ல….. அழகழகாக ஐந்து சின்னஞ்சிறு குட்டிகள்… விதவிதமன வண்ணங்களில் வானவில்லை போல… அதன் அழகு எங்களை கவர்ந்தது உண்மை. ஆனாலும் நாங்கள் மனிதர்கள் அல்லவா.  எண்ணங்கள் பறக்க தொடங்கியது.  எங்களின் தூங்கும் அறையில் நான்கு பேர் படுப்பதே பெரிய விசயம். அதில் எப்படி பூனைக்கும் இடம் அளிப்பது. அதனால் பூனை வெளியே போன சமயம் நாம் குட்டிகளை நைசாக வெளியேற்றலாம் என நான் சொன்ன முடிவை, எப்போதும் போல, ஆனால் ஒரு மாறுதலுக்கு மனைவிக்கு பதில் என் முடிவை எனது இரண்டு மகன்களும் தடுத்தனர்.

நாட்டில் வேண்டுமானால் ஆட்சி மாறி மாறி வரும்…. வீட்டில் என்றும், எப்போதும் அம்மாவின் ஆட்சிதான் என்பதால், அம்மாவிடம் முறையிட்டனர். அம்மா…. பாவம்மா குட்டி பூனைகளே…. நடக்க கூட முடியலே… வெளியே விட்டா அதை நாய் சாப்பிடும்…. இங்கேயே இருந்துட்டு போகட்டும்… கொஞ்சம் வளர்ந்ததும் வெளியே விடலாம் என்று கெஞ்சிய என் குழந்தைகளின் முன்னால் என் மனைவி, வாழ்க்கையில் முதல் முறையாக நான் எடுத்த பூனைகுட்டி வெளியேற்ற முடிவையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாள்….

அம்மா தனது பிள்ளைகளின் பக்கம் சாய்ந்து… மேலே சொன்னால் இந்த கடுவன் பூனை வெளியே குட்டிகளை சாப்பிட காத்து கொண்டிருக்கு, குட்டிகள் இன்னும் 10 நாளில் பெரிசாயிடும்… நாம எல்லாரும் அது வரை ஹாலில் படுத்துக்கொள்ளலாம். மனைவியின் சொல்லே மந்திரம் என்ற சராணாகதி தத்துவத்தில் வாழும் நானும் அதை ஏற்று, சுற்று வட்டாரத்தின் அறிவுரைகளையும் மீறி பூனைக்கு எங்கள் படுக்கை அறையில் இடம் கொடுக்கப்பட்டது.

எங்கள் படுக்கை அறையில் நன்கு வளர்ந்து வந்த பூனைக்குட்டிகள் அறையில் ஓடி விளையாட ஆரம்பித்ததும் மீண்டும் வரத் தொடங்கியது அறிவுரைகள். வாழ்வில் நமக்கு செலவில்லாமல் கிடைப்பது அறிவுரை மட்டும்தானே

பூனை வீட்டில் இருந்தால் ஆகாது.

அது வாழ்க்கையை அது பார்த்து கொள்ளட்டும்…

மிருகத்தின் மேல உனக்கு என்ன திடீர் அக்கறை….

உனக்கு படுக்க இடம் இல்லை… பூனைக்கு இடம் தேவையா?

உனக்கு ஏன்டா இந்த வம்பு…

பேசாம வெளியே கொண்டு போய் விடு….

பல விசயங்கள் ஏறாத இந்த மரமண்டையில் இந்த அறிவுரைகள் நன்றாக ஏறியது…

என் மனைவி பூனை வீட்டில் வளர்வதால், எலிகள் மட்டும் அணிலை கொண்டு வந்து ஆகாரமாய் கொடுப்பதால், பூனையை வெளியேற்ற நினைத்தாலும் குட்டிகளின் மேல் என் மகன்களின் அன்பு அவளை யோசிக்க வைத்தது… மனைவிக்கோ என் இரண்டு மகன்களின் விருப்பத்தை மாற்றிட மனம் இல்லை. நன்கு வசம் கண்ட பூனை குட்டிகளின் அம்மாவோ எங்கள் வீட்டை விட்டு செல்ல மறுத்தது.  ஆனாலும் என் மனைவியின் அறிவுரைப்படி குட்டிகளின் பூனை குட்டிகளை அதன் அம்மாவோட எங்கள் வீட்டின் மாடி படிக்கட்டின் கீழே மாற்றுக் குடித்தனம் வைத்தோம்.

நாய்களின் பசி வேட்டையிலிருந்து குட்டிகளை காப்பாற்ற இந்த இடம் தாய் பூனைக்கு உதவியது. எங்கள் வீட்டின் பாலை குடித்து நன்கு வளர்ந்தாலும் அதற்கு பூனைக்கு எலிகளையும், அணில்களையும் மிகவும் பிடித்திருந்தது. தாய் பூனை தினம் தினம் எலிகளையும், அணில்களையும் கொண்டுவர அதை பூனை குட்டிகள் சாப்பிட்டதை என் மனைவி, என் அம்மாவுடன் என்னையும் சேர்த்து என்னை சுற்றி இருந்த பலர் விரும்பவில்லை.

எனது பிள்ளைகளுக்கு பூனை குட்டிகளின் மேல் இருந்த பாசம் எங்களை எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுத்தது. இப்படி 20 நாட்கள் ஓடியது. எல்லோரும் என்னை குடைய ஆரம்பித்தனர். இந்த பூனைகளின் தொல்லை தாங்க முடியவில்லை…

அதை வெளியேற்று என்று தொந்தரவு செய்ய நானும் மகுடிக்கு கட்டுபட்ட பாம்பாக, எனது சுய அறிவை மறந்து இரண்டு குட்டிகளை பக்கத்தில் உள்ள பூங்காவில் விடவும் மற்ற இரண்டு குட்டிகளோடு தாய் பூனையை என் நா(வீ)ட்டை விட்டு கடத்தவும் முடிவு செய்தேன். எனது மனைவியும், மகன்களும் மனதில் குறையுடன் என்னுடன் உடன்பட்டனர். இருப்பினும் என் நா(வீ)ட்டை விட்டு வெளியேற மறுத்த தாய் பூனை வாசலிலேயே இருந்தது பிடிவாதம் பிடித்தது.

விடப்பட்ட இரண்டு குட்டிகளில் ஒன்று என் வீடு திரும்பியது மற்றொன்றை பற்றிய விவரம் தெரியவில்லை. இது எங்களின் மனதை நெருடியது…..குட்டிகளின் ஆட்டம், ஓட்டம் எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது. அதனை கருத்தில் கொண்டு, வெளியே போரட்டம் நடத்திய பூனையின் போரட்டத்தை எங்கள் வீட்டின் அரசாங்கம் அதாவது என் மனைவி ஏற்றுக்கொண்டதால், பூனையின் பிடிவாதம் வெற்றி பெற்றது. மனைவி, மக்களின் அன்பு கட்டளையின் காரணமாக மீண்டும் எங்களது மாடிப்படிக்கட்டின் கீழேயே வெற்றிகரமாக பூனை தன் குட்டிகளுடன் குடியேறியது.

குடும்பத்துடன் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. பூனைகளை யாராவது வளர்க்க முன் வந்தால் தந்து விடலாம் எனவும், அதுவரை அவற்றை இங்கேயே வளர்ப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லோரிடமும் பூனைகுட்டி என் வீட்டில் இருப்பது சொல்லப்பட்டது.

எங்களின் மகிழ்ச்சியை அன்று இரவு நடந்த சம்பவம் முடித்தது. நடக்க ஆரம்பித்த குட்டிகள் வெளியே செல்ல இரவு வேளையில் நாய் ஒரு குட்டியை கொன்று தனது நீண்ட நாள் தோல்வியை சரி செய்தது. இதை தொடர்ந்து மறுநாளே மற்றொரு குட்டியையும் தாய் பூனை நாயிடம் இழந்தது.

ஒரு மாதம் வளர்த்த என் மனைவி, மக்களை இந்த தொடர் இழப்பு பாதித்தது. என் மகன்களின் கண்ணீர் என்னை மிகவும் பாதித்தது.

வளர்ந்து மீதி இருந்த இரண்டு குட்டிகளோடு எங்களை பரிதாபமாக பார்த்து விட்டு இனியும் இங்கு பாதுகாப்பில்லை என்று தாய் பூனை குட்டியுடன் எங்களை விட்டு விலகி சென்றது. குற்ற உணர்ச்சியில் நான் தவித்த போது… எனக்கு பல அறிவுரைகள் கிடைத்தன…

நாம என்ன பண்றது… அதுக்குத்தான் கடவுள் அதுக்கு பல குட்டிகளை தரான் என்றார் ஒருவர்…

நம்மால ஆனத நாம செய்தாச்சு…. இதுக்கு மேல என்ன பண்ண முடியும் என்றார் ஒருவர்…

நாம என்ன கடவுளா? அது அது விதிப்படிதான் நடக்கும் என்றார் ஒருவர்…

நம்மால முடிஞ்சதை செஞ்சாச்சு…. இதுக்கு மேல எப்படி அதை காப்பாத்த முடியும் என்றார் ஒருவர்….

இந்த மனிதர்களின் வாதத்தில் தொலைந்து போன என் மனிதாபிமானத்தை தேடத்தொடங்கினேன் அமைதியாக…..

அன்புடன் ஹேமோ…..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.