
சென்னையில் இரண்டே மாதத்தில் சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் தானியங்கி கேமரா மூலம் சுமார் 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். நவீன கேமராக்கள் மூலம் தற்போது வரை சுமார் 8,300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாம்.
சென்னை அண்ணா நகரில் ஜூலை மாத இறுதியில் 58 நவீன ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருப்பதாகவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள் படம்பிடித்து வருகின்றன என்றும் போலீஸார் கூறியுள்ளார்.

இவற்றில், அதிகபட்சமாக ஒரே நாளில் சென்னை அண்ணா நகரில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாம்.
நாட்டின் மற்ற பகுதிகளில் இருப்பதைப் போல், இன்னமும் தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து, வந்த பின்னர் இது குறித்து விவாதிக்கப் பட்டு முடிவு எடுக்கப் படும் என்று கூறப் பட்டது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி நாடு திரும்பியுள்ள நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப் படுமா என்பது தெரியவரும்.
இதனிடையே, புதிய மோட்டார் வாகனச்சட்டம், அரசுக்கு காமதேனு அல்லது கற்பக விருட்சம் கிடைத்து விட்டதுபோல்தான் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.



