
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய முகேஷ் (பெயர் மாற்றம்), கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது கீதா இருவரும் உறவினர்கள்.
இவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவி வேறு ஒருவருடன் பழகியதால் முகேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

நேற்று இரவு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருத்தினர் மாளிகை அருகில் கீதாவிடம் இது குறித்துக் கேட்டுள்ளார் முகேஷ். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகேஷ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மாணவியின் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் எரிச்சல் தாங்காமல் மாணவி அலறியதால் அருகில் இருந்தவர்கள் மாணவியை அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

மாணவர் முகேஷையும் அங்கிருந்தவர்கள் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த முகேஷும் அதே மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



