சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாது என அறிவித்திருப்பது மதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக திமுகவின் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
பாமக, நாம் தமிழர் கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி 3 தொகுதி தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
அரவக்குறிச்சி கலையரசன்
சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் மதிமுகவின் ஒன்றிய செயலர் கலையரசன் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். அதிமுகவின் செந்தில் பாலாஜி, திமுகவின் கேசி பழனிச்சாமிக்கு கடும் போட்டியை தரக்கூடியவராக இருப்பார் கலையரசன் என கூறப்பட்டது.
போட்டியிடாதது அதிருப்தி
தற்போது அரவக்குறிச்சி தொகுதியிலும் கூட மக்கள் நலக் கூட்டணி போட்டியிடவில்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருப்பது மதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை மதிமுக நிர்வாகிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் குமுறல்
மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பதால் மதிமுகவை மக்கள் புறக்கணிக்கத் தொடங்குகிறார்கள்; அரவக்குறிச்சியில் போட்டியிட தகுதியான வேட்பாளர் இருந்தும் புறக்கணிப்பு தேவையா? பெரியார் தி.க. மாதிரி எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாமலேயே இருந்துவிடலாம் என்றெல்லாம் குமுறி கொட்டி வருகின்றனர்.
காணாமல்தான் போகும்
மக்கள் நலக் கூட்டணியால்தான் மதிமுகவில் இருந்து பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், தூத்துக்குடி ஜோயல், பொருளாளர் மாசிலாமணி, மதுரை டாக்டர் சரவணன் என பலரும் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்தும் மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்போம் என அடம்பிடித்தால் மதிமுகவே காணாமல் போய்விடும் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
அரவக்குறிச்சியிலும் போட்டியிடலைன்னா கட்சி காணாமல் போகும்: மதிமுகவில் சலசலப்பு!
Popular Categories



