சென்னை:
திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடுதர வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திருவாரூர் பல்கலைக்கழகக் கட்டட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
திருவாரூர் மாவட்டம், கங்களாஞ்சேரி அருகே நாக்குடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் செலவில் மத்திய பல்கலைக்கழக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அங்கு இன்று (29-3-2015) காலை கான்கிரீட் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றபோது, மேற்கூரையும் சுவரும் இடிந்து விழுந்து வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மத்திய பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் கட்டுமானப் பணியிலேயே பாதுகாப்பற்ற, தரமற்ற நிலை இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கட்டட விபத்துக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தொழிலாளர்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அங்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதோடு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. கட்டுமான நிறுவனங்கள் ஏறக்குறைய அவர்களைக் கொத்தடிமைகளாகவே நடத்துகின்றன. இதைத் தமிழக அரசு அனுமதிப்பது முறையல்ல.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகவும் நலன்களுக்காகவும் உடனடியாக சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்கவேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. – என்று கோரிக்கை விடுத்துள்ளார்.