
அமமுக கட்சியின் நிர்வாகி புகழேந்தி நேற்று வேலூரில் உள்ள முதல்வரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அச்சந்திப்பின் பிறகு, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன். அதிமுகவில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் தினகரனால் அனைத்தையும் இழந்து நிற்கிறேன் என்று கூறினார்.
நேற்று பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிடிவி தினகரனிடம் இந்நிகழ்ச்சி குறித்து கேட்ட பொழுது புகழேந்தி இப்போது அமமுகவில் இருக்கிறாரா அல்லது அதிமுகவில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும் என்பது போல இருக்கிறது புகழேந்தியின் பேச்சு.

அவர் 23 ஆம் புலிக்கேசி படத்தில் வரும் வடிவேலுவைப் போன்றவர். அவர் பற்றியெல்லாம் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள சசிகலா சிறை விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தவறு. அவரை விடுவிக்க அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.