
ஊதிய உயர்வு, உயர் படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் உள்ள 18,000 அரசு மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக் கிழமை அன்றே, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மருத்துவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேலைநிறுத்தப் போராட்டம் மட்டுமல்லாது, சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று இரவு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
2 மணி நேரம் நீடித்த அந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு, மருத்துவர்கள் போராட்டத்தைத் தள்ளி வைப்பதாகவும் நாளை முதல் வழக்கம் போல் மருத்துவமனைக்குச் செல்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். அதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய பாஸ்கர், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .அவர் கூறுகையில், போராட்டம் தொடர்ந்தால், பொதுமக்களின் நலனை காக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களில் எங்கும் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை .
மக்கள் நலனில் தங்களது பொறுப்பினை உணர்ந்து மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.