
சுஜித் வில்சன் மீட்புப் பணியில் ஈடுபட்டு, களத்தின் நின்று கடுமையாக உழைத்தவர்கள் குறித்து விமர்சனம் செய்வது, அவர்களை கவலை அடையச் செய்யும் என்று கூறியுள்ளார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியவை…
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கனமழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்களுக்கு உரிய முறையிலான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 5ஐ தொடர்பு கொள்ள முயற்சி. தங்கு கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 99 விழுக்காடு படகுகள் திரும்பிவிட்டன.
மழையின் தீவிரத்தை பொறுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இறந்த பிறகு சடலத்தை மீட்கும் விதிகளுக்கு உட்பட்டே சுஜித் உடல் மீட்கப்பட்டது.
சுமார் 600க்கும் மேற்பட்டோர் சுஜித் வில்சன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். களத்தில் பணியாற்றியவர்களின் திறனை சந்தேகிப்பது சரியான எண்ணம் இல்லை. கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப் பணியாளர்களை கவலை அடையச் செய்யும்.
சுஜித் மீட்பு பணியின் சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்படும் – எதிர்காலத்தில் இது போல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் சடலத்தை காட்சிப்படுத்தியதால் உலக அளவில் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
உயிரிழந்த சிறுவனின் உடலை காட்சிப்படுத்துவது விதிமுறைகளுக்கு எதிரானது
விபத்து, போர், பேரிடரில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் விதிகள் பின்பற்றப்பட்டது.
மீட்பு பணி என்பது வேறு, உயிரிழந்த சடலத்தை மீட்பது என்பது வேறு! உயிருடன் இருக்கும் போது நடைபெறும் மீட்பு பணி, சடலத்தை மீட்கும் போது வேறுபடும். சுஜித்தை மீட்க ஒரு மனிதனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அதை எல்லாம் செய்துவிட்டோம்.
தற்போது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மீட்கவே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்… என்றார்.



