
செங்கல்பட்டு சென்னை கடற்கரை, தாம்பரம்-சென்னை கடற்கரை தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும், இந்த ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட தயாரானது. பயணிகள் சிலர், ரயிலில் ஏறி அமர்ந்தனர்.
ரயில் இன்ஜினில் இருந்து 3வது பெட்டியான மகளிர் பெட்டியில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. பணியில் இருந்த ரயில்வே காவலர் எஸ்.ஐ குணசேகரன், காவலர் தனசேகர் ஆகியோர் அதிர்ச்சியடைந்து, சத்தம் வந்த திசை நோக்கி சென்று பார்த்தனர்.
ஒரு கட்டை பையிலிருந்து சத்தம் வந்தது. அந்த பையை பார்த்தபோது, அதற்குள் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
அந்த குழந்தையை மீட்டு, செங்கல்பட்டு குழந்தைகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அதிகாரிகள் விரைந்து வந்து, குழந்தையை மீட்டனர்.
குழந்தையின் எடை குறைவாக இருந்தது. அழுது கொண்டே சோர்வாக இருந்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.