
நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயினருவியில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கப் பட்டது. இதனால் அருவியில் குளிக்க முடியாமல் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தின் ஆன்மிக சுற்றுலாத் தலமான திருக்குற்றாலம் பாடல் பெற்ற சிவத் தலமாகத் திகழ்கிறது. சிவபெருமான் நர்த்தனம் ஆடிய பஞ்ச சபைகளில் சித்திர உருவில் காட்சி தரும் சித்திர சபை குற்றாலத்தில் அமைந்திருக்கிறது.
திருக்குற்றாலம் பிரதான அருவியில் நீராடி விட்டு, திருக்குற்றாலநாதரை தரிசித்து அருள் பெறுவது பக்தர்களின் வழக்கம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை நிலவும் காலங்களில் குற்றாலத்தில் சாரல் சீஸன் களை கட்டும்.

பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி 4 மாதங்களுக்கு வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் அடுத்த மழை சீஸன் குற்றாலத்தில் நிலவும். இந்தக் காலங்களில் ஐயப்ப சீஸனும் வருவதால், திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரை தரிசித்து, செங்கோட்டை வழியாக அச்சங்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஐயப்ப ஸ்வாமியை தரிசித்துவிட்டு, பம்பை வழியாக சபரிமலைக்குச் செல்ல ஐயப்ப பக்தர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.