மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கம்: காவல் ஆணையர்

மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும்.

சென்னை:

மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட போராட்டம் கடந்த 17ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோத கும்பல் புகுந்ததால், போராட்டம் திசை மாறியது. இதனால் கடந்த 23ஆம் தேதி மெரினாவில் இருந்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

அந்நேரத்தில், மெரினா கடற்கரை சாலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும், நகரின் பிற பகுதிகளிலும் பயங்கர கலவரம் ஏற்பட்டது. கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அதன் பிறகு கலவரம் ஓய்ந்தது. இந்த கலவரம் தொடர்பாக 235 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, மெரினாவில் ஜனவரி 29 ஆம் தேதி ஞாயிறு அன்று மீண்டும் இளைஞர்கள் ஒன்று கூட திட்டமிட்டு இருப்பதாகவும், இளைஞர்கள் கட்சி ஆரம்பிக்க தீர்மானித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்காக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது.

இதனை அறிந்த உளவுப்பிரிவு போலீசார் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து,  மெரினா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்  ஜனவரி 29 முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கமிஷனர் ஜார்ஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில்  மெரினா கடற்கரை பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை  கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது.  நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும்.  அனுமதியின்றி மெரினாவில் கூடுவது,ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தடை தொடரும். கலங்கரை விளக்கம் முதல் நேப்பியார் பாலம் வரை போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்.