
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், 50 பெண்கள் உட்பட 261பேர் கைது செய்யப் பட்டனர்.
அயோத்தி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டியும், மீண்டும் அதே இடத்தில் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும், இடித்தவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 261 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்ட எஸ் டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் வைத்து நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைத்தலைவர் ஷேக் ஜிந்தா மதார், மாவட்ட பொருளாளர் முஹம்மது நைனார், மாவட்ட துணைச் செயலாளர் இம்ரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒலி, சித்தீக், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசன் கனி, தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது கடையநல்லூர் தொகுதி தலைவர் நைனா முஹம்மது கனி, கடையநல்லூர் நகர தலைவர் யாசர் கான், நகர செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் கலந்து கொண்டு இந்த விவகாரத்தில் நீதி வேண்டி கண்டன உரை நிகழ்த்தினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா மாவட்ட தலைவர் திப்பு சுல்தான், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர் தொகுதி செயலாளர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கம் இட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 பெண்கள் உட்பட 261 கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டனர்

இந்த போராட்டத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் கூடுதல் டிஎஸ்பி ரவிச்சந்திரன், புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், ராஜ்குமார், மற்றும் சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், கமாட்டோ படை இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்குமார் கடையநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் விஜய்குமார் மற்றும் 30 கமாண்டோ படை உட்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல் தென்காசியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அதன் பின்னர் போலீஸார் கைது செய்தனர்.



