
எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ். உறுதிமொழியை வாசிக்க அதனை மற்றவர்கள் வழிமொழிந்து கூறினர்.

அதிமுகவில் எந்தவொரு தனி குடும்பத்தின் ஆதிக்கத்தையும் தலைதூக்க விடமாட்டோம் என ஓ.பி.எஸ். உறுதிமொழி வாசித்தார். மீண்டும் சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்பதை தெளிவாக குறிப்பிடும் வகையில் இது இருக்கிறது.

மேலும், ஒரு கட்சிக்கு நல்ல தொண்டர்களும் வேண்டும், நல்ல தலைமையும் வேண்டும் என்றும், இவை இரண்டுமே அமைந்திருப்பது அதிமுகவுக்கு மட்டுமே எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அந்த உணர்வோடு ஒற்றுமையோடு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் விட்டுச்சென்ற கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் சாதித்து வெற்றிக்கனியை பறிப்போம் என்ற உறுதிமொழியையும் அவர் கூறினார்…



