
தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளின் முக்கியத்துவம் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு அங்கமாகதான் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னை ராணி மேரி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மருதாணி வரையும் போட்டி நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, தங்களது கைகளில் மருதாணிகளை கொண்டு விழிப்புணர்வு வாசகம் திட்டி அசத்தி காட்டினர்.

ஆளும் அரசை தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்களர்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதும் தவறு பெறுவதும் தவறு, இளம் வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்களிப்பது ஜனநாயக கடமை போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மாணவிகள் தங்கள் கைகளில் போட்டிப்போட்டு வரைந்தனர்.
மருதாணி வரையும் போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றதை பார்வையிட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இதில் தேர்வு செய்யப்படும் மாணவிக்கு தேசிய வாக்காளர் தினத்தன்று பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், முழு வாக்குப்பதிவு எட்டும் நோக்கிலே இளம் வாக்காளர் இடையே கல்லூரிகளில் இது போன்ற போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்வதில் தவறு நிகழாது.
18 வயது உட்பட அனைத்து வயது வாக்காளர்களும் தங்களுக்கு கொடுக்கப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை எதிர்பாராமல் தங்களின் வாக்குரிமை என்றும் கருவி கொண்டு இந்தியாவை பெரும் நாடாக கட்டமைக்க வேண்டும் என்பதே மாணவிகள் மருதாணி கொண்டு உணர்த்துகின்றனர்