அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு குண்டு வெடிப்பு! சென்னையில் பரபரப்பு!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
country bomb in chennai - 2026

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்பது தெரிந்தது.

நாட்டு குண்டு வெடித்ததில் தனியார் கார் ஷோரூம் மற்றும் காரின் கண்ணாடி சிதறியுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசியது யார் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது ஜெமினி மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் எதிர்புறம் இருக்கும் நபர் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசிய காட்சி பதிவாகியுள்ளது. எதிரே உள்ள நபர்கள் மீது வீசிய அந்த வெடிகுண்டு அவர்கள் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது தெரிய வந்தது.

அந்த மர்ம நபர்கள், யார் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசினார்கள்? என்பது குறித்து தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வெடிகுண்டு வெடித்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்.

போக்குவரத்து அதிகமாக உள்ள அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அருகில் அமெரிக்க தூதரகம் உள்ளது என்பதால், போலீஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.