
சென்னை ஓமந்தூரார், ராஜீவ் காந்தி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனிடையே, கொரோனாவுக்கு வேறு எந்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையும் இல்லாததால், ரெம்டெசிவிர் மருந்து மீதான ஆர்வம் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது.
அமெரிக்க அரசு மற்றும் கிலீட் சயின்சஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்து தான் ரெம்டிசிவிர்,. அதனை எபோலா வைரஸ் தொற்றிற்கு பயன்படுத்தினர். மனித உடலுக்குள் நிகழும் வைரஸ் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் தன்மை இந்த மருந்திற்கு உள்ளதால், கொரோனா வைரஸுக்கு சிறந்த மருந்தாக அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரெம்டெசிவிர் எனும் மருந்து கொரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துவதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானிலும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஓமந்தூரார், ராஜீவ் காந்தி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது.