
சென்னை அண்ணா சாலையையொட்டி உள்ள பீட்டர்ஸ் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வந்துள்ளது.
வீட்டில் உள்ள தங்க நகைகள், பணம், வெளியில் நிறுத்தி வைத்திருந்த பைக் திடீர் திடீரென காணாமல் போவதாக அண்ணா சாலை போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.இதனால் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் இரவில் உறங்க மொட்டை மாடிக்கு சென்றுவிட்டனர். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்த திருடன் 5 சவரன் தங்க நகை உட்பட பணம், பொருட்களை திருடிச் சென்றுவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரையடுத்து அங்குள்ள பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். இதில் திருடன் ஐஸ் ஹவுஸ் பகுதியில் வேறொரு நபரை சந்திப்பதை கண்டுபிடித்து, அந்த நபரிடம் விசாரித்தனர்.
இதில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மேகா என்கிற மேகநாதன்தான் திருடன் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் அடகு கடையில் நகைகளை அடகு வைத்தது எல்லாம் சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கொரோனா காரணமாக மனைவி, குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு இங்கு தோழியுடன் ஊர் சுற்றியது தெரியவந்தது.

கொள்ளையன் மேகா திருடிய நகைகளை திருடிய நகைகளை விற்பனை செய்து, அதன்மூலம் தனது தோழிக்கு, ஜிமிக்கி, கம்மல் வாங்கி தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கொள்ளையன் மேகாவை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடைபெறாத வகையில் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



