திருச்சி:
திருச்சியில் வரும் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுப் போராட்டங்கள் என்பது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் நீட் பெயரால் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்தது.
இதனால் தாம் நடத்த திட்டமிட்டிருந்த போராட்டங்களை ஒத்திவைப்பதாக தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், திருச்சி உழவர் சந்தை அருகே, திமுக.வினர் பொதுக்கூட்டம் நடத்தினர். தொடர்ந்து பாஜக.,வினர் அதற்கு எதிர்ப்புக் கூட்டம் நடத்தினர்.
இதனால், தாமும் ஒரு பொதுக்கூட்டத்தை திருச்சி, உழவர் சந்தை அருகே நடத்த திட்டமிட்டார் தினகரன். ஆனால், அவருக்கு அங்கே அனுமதி மறுக்கப்பட்டது. அதே தினத்தில் வேறொரு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே அந்த இடத்தை அளிக்க ஒப்புக் கொண்டிருப்பதால், தினகரன் தரப்பு கூட்டம் போட அந்த இடத்தைத் தர இயலாது என்று மாநகராட்சி கைவிரித்தது. அதே போல் போலீஸாரும் அனுமதி மறுத்தனராம்.



