
காதலை ஏற்க மறுத்த தோழியை பழிவாங்கும் நோக்கில் அவரது தாயாரான பெண் தொழிலதிபரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் தொழிலதிபர். இவரை கடந்த சில நாட்களாக மர்மநபர் ஒருவர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் அவர் எதார்த்தமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த போது தனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டதை கண்டார். அதில் தனத புகைப்படம் ஆபாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சைபர் கிரைம் போலீஸார் அந்த ஐபி முகவரியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவன் என்பது உறுதியானது.
ஒரே பள்ளியில் பயின்று வந்த தொழிலதிபரின் மகளும், அந்த மாணவனும் நட்பாக பழகி வந்ததும் திடீரென அந்த மாணவன், அந்த தோழியை காதலிப்பதாக சொன்னார்.
இதை விரும்பாத அந்த தோழி, அந்த மாணவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். தன்னை தனது தோழி காதலிக்க மறுப்பதற்கு அவரது தாயார்தான் காரணம் என கருதி அவரை பழிவாங்க அந்த மாணவர் அவ்வாறு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி மாணவன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.