கடன் தொல்லை காரணமாக, மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் குறிஞ்சி குமரன். இவருக்குச் சொந்தமாக ஒரு நர்சரி பள்ளி உள்ளதாம். அதுமட்டுமின்றி கடை வைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு குறிஞ்சி குமரன் குடும்பத்தினர் 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், 8 பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதில், வீட்டிலேயே ஜெயசக்தி, ஜெகஜோதி, வேல்முருகன், குறிஞ்சிமுருகன், தாரணி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய தேவி, தங்கச்செல்வி, மோனிகா ஆகியோரை மீட்ட அப்பகுதியினர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர். நான்குபேரை மோட்டார் சைக்கிளிலும், இருவரை மினிபஸ்சிலும் கொண்டு சேர்த்தோம் என்று குற்றம் சாட்டியுனர்.



