திருப்பதி
வருடத்துக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறுவது பிரம்மோத்ஸவம். ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது சேவையுடன் பெருமாள் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கவே இப் பிரம்மோத்ஸவத்தை ஏற்றருள்கிறான்.
திருவேங்கடமுடையான், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த நாளை முன்னிட்டே ஆதி காலம் முதல் பிரம்மோத்ஸ்வம் திருமலை திருப்பதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரம்ம தேவனே முன்னின்று பெருமாளுக்கு நடத்தும் உத்ஸவம் என்பதால் இதற்கு பிரம்மோத்ஸவம் எனப் பெயராம். தமிழில் பெருந்திருவிழா என்கிறோம்.
திருவோண நட்சத்திரத்துக்கு பத்து நாட்கள் முன்னதாக இந்த விழா துவங்குகிறது. விழாவில் துவக்கமாக துவஜாரோஹணம், விழா முடிவில் சக்ரஸ்நானமும் துவஜ அவரோஹணமும் நடக்கிறது. பிரமோத்ஸவத்தில் சிறப்பாகத் திகழ்வது ஐந்தாம் நாள் இரவு நடக்கும் கருட சேவையும், எட்டாம் நாள் காலை நடக்கும் தேரோட்டமும்தான்! பக்தர் வெள்ளம் அலைகடலெனத் திரண்டு ஏழுமலையானை தரிசித்து அருள் பெறும் இந்த வைபவத்தைக் காணும்போதே சாதாரண மக்களுக்கும் சிலிர்ப்பு ஏற்படும்.
கருடோத்ஸவத்தில் மூலவருக்கு அலங்கரிக்கப்படும் மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம், சகஸ்ரநாம மாலை, சென்னையில் இருந்து பெரும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சமர்ப்பிக்கப்படும் புதிய குடைகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் ஆண்டாள் சூடிக் களைந்த திரு மாலைகள், என மலையப்பஸ்வாமி விசேஷ அலங்காரங்களுடன் கருட வாகனத்தில் காட்சி கொடுக்கிறார். அதனால் இந்த தரிசனம் பக்தர்களால் பெரும் கொண்டாட்டத்துடன் அனுபவிக்கப்படுகிறது.
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனின் இந்த பிரமோத்ஸவத்தில் வேறுபாடு ஏதுமற்று பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்கிறார்கள். ஒரு புறம் கோவிந்த நாமங்களுடன் நாம சங்கீர்த்தனம் ஒலிப்பதைக் கேட்பதும், மறுபுறம் பக்தியுடன் பஜனை சம்பிரதாயத்தில் பாடல்கள் ஒலிக்கக் கேட்பதும் சிலிர்ப்பான அனுபவத்தைத் தரும். கோலாட்டம், சக்க பஜனை, அரங்கத்தில் நடக்கும் ஹரிகதா காலட்சேபம், ஏழுமலையப்பனைப் போல் வேடம் தரித்து எம்பெருமானைக் கண்முன் நிறுத்தும் பக்தர் கூட்டம், பெண்கள் கூடிக் களித்தாடி பெருமான் பெயரைச் சொல்லி பக்தி உணர்வையூட்டும் ஆடல் பாடலென எண்ணிலடங்காக் காட்சிகளை நம் உள்ளத்தே பதித்து வைத்துவிடும் அபார சக்தி இந்த பிரம்மோத்ஸவத்துக்கு உண்டு!
இரவில் வண்ண வண்ண மின் விளக்குகளால் செய்யப்பட்ட அலங்காரத் தோரணங்களும், வரவேற்பு வளைவுகளும், மலர்களின் தோரண அலங்காரங்களும் பெருமானின் வடிவென நம் உள்ளத்தே குடிகொண்டுவிடும் அழகின் அதிசயம்தான்! பெருமாளின் வைகுந்த அழகை இங்கேயே நாம் தரிசித்தாற் போன்று ஓர் உணர்வை ஊட்டுகின்ற பேரழகுதான்!
கலியுக கடவுளாக, காக்கும் தெய்வமாக, வேண்டும் வரம் அருள்பவராக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா செப்டம்பர் மாதம் 23-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 1-ந்தேதி நிறைவடைகிறது. இந்த விழாவின் முதல் நாள் அன்று ஆந்திர அரசு சார்பில் மூலவருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த முறை, பிரம்மோத்ஸவ விழாவையொட்டி புதிதாக சர்வ பூபால வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
வருடம் முழுவதும் திருமலையில் திருவிழாதான் என்றாலும் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த பிரம்மோத்ஸவ விழா, மிகப் பிரமாண்ட விழா. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மற்றும் இரவில் உத்ஸவரான மலையப்ப ஸ்வாமி, வித விதமான வாகனங்களில், வித விதமான அலங்காரங்களில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் ஐந்தாம் நாளான்று நடைபெறும் கருட வாகன சேவையைக் காண பல லட்சம் பக்தர்கள் வருவர். விழா நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து வரும் கலைக்குழுவினர் மாடவீதிகளில் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் காணக் கண் கொள்ளக் காட்சிதான்.
இந்த வருட பிரம்மோத்ஸவ விழாவின் முதல் நாள் (செப்.23) காலை கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. அந்தக் கொடியில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். திருக் கருடக் கொடி ஏறியதும், கொடியில் உள்ள கருடாழ்வாரே, அனைத்து உலகத்தாரையும் அனைத்து தேவதைகளையும் ஏழுமலையானின் பிரம்மோத்ஸவப் பெருவிழாவைக் காண வருமாறு அழைக்கின்றார். இந்த பிரம்மோத்ஸவம் நிறைவுறும் வரையிலும், துவஜஸ்தம்பத்தில் ஏற்றப்பட்டிருக்கும் இந்தக் கொடியிலேயே வீற்றிருந்து அனைத்தையும் கண்காணிக்கிறார் என்பர். கருட பகவானே பெருமானைச் சுமந்து கொண்டு அன்பர்க்கு அருள் வழங்க ஓடி வருகிறார். பெரியாழ்வார் திருக்கூடல் எனும் மதுரை நகரில் யானை மீதமர்ந்து பெருமாளுக்குப் பல்லாண்டு பாடினார். அப்போது, கருடன் மீதேறிப் பறந்து வந்தார் பெருமாள். இது காப்பதற்காக அல்ல, காண்பதற்காக! தன் பக்தரான பெரியாழ்வாருக்கு வழங்கப்படும் மரியாதைகளைக் காண்பதற்காக! அந்தப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிய போது, கருடனுக்கும் சேர்த்தே வாழ்த்துப் பாடுகிறார் ஆழ்வார்.
அன்று இரவு பெரிய சேஷவாகனத்தில் பவனி வருகிறார் திருமலையப்ப ஸ்வாமி. சேஷனாகிய ஆதிசேஷ நாகம், தாஸ்ய பக்திக்கு எடுத்துக் காட்டாய் அமைந்த பரம தாஸர். பெருந் தொண்டர். அந்தத் தொண்டின் காரணத்தாலேயே அவர் எந்நேரமும் பெருமானைச் சுமந்து கொண்டு, பெருமாளின் சயனத்திற்குப் படுக்கையாய் அமைந்தார். பெருமாள் சென்றால் குடையாய், இருந்தால் சிங்காசனமாய் அந்தத் திருமாலுக்கு அரவு என ஆழ்வார் பாடியது போல் தொண்டின் சிறப்பை வெளிப்படுத்துபவர் ஆதிசேஷன். கண்ணன் எனும் குழந்தையைக் கூடையில் சுமந்து கொண்டு வசுதேவர் யமுனையைக் கடக்கச் சென்றபோது, பெரும் மழையில் பெருமான் நனைந்திடாமல் காத்துப் பின் வந்தவரும் ஆதிசேஷனே! ராமன் பின்னே தொண்டுபுரிய லட்சுமணனாய் உடன் வந்தவரும் அவரே! இந்த சேஷ வாகனத்தில் பெருமாளைத் தரிசிக்கும் பக்தருக்கு குண்டலினீ யோக பலம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இரண்டாம் நாளான செப்.24 ஞாயிறு அன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு ஹம்ஸ வாகனத்திலும் பெருமாள் பவனி வருகிறார். ஹம்ஸமாகிய அன்னம், ஞானத்தின் வடிவம். எதை ஏற்க வேண்டும் எதை ஏற்கக் கூடாதென ஞானத்தைப் போதிக்கும் வடிவம். பெருமான் ஞான வடிவினனாய் அன்பர்க்கு போதிக்கும் அரிய தத்துவம் இந்த வாகனக் கோலம்!
மூன்றாம் நாளான (செப்.25) திங்கள் அன்று காலை சிம்ம வாகனத்தில் உலா வருகிறார் பெருமாள். தர்மத்தைக் காக்க நரசிம்மனாய்த் தோன்றிய பெருமாள், துஷ்டர்களை அழித்து சிஷ்டர்களைக் காத்து தர்ம பரிபாலனத்தைத் திறம்படச் செய்கின்றான். சிம்மம், கம்பீரத்தின் வடிவம். அந்த கம்பீரத் தலைமையை அன்பர்க்குக் காட்டும் அற்புத அலங்காரத்தை அன்று நாம் சேவித்து மகிழலாம். அன்று இரவு முத்துப் பந்தல் வாகனத்தில் பெருமாள் வலம் வருகிறார். முத்து என்றால் குளிர்ச்சி. நல் முத்துக்கள் குளிர்ச்சிக்கு அடையாளம். வேங்கடமோ, குளிரருவி வேங்கடம் எனும் சிறப்புடையது. இந்தக் குளிர்ச்சி பெருமானின் மனக் குளிர்ச்சியாய் நிறைய அன்பர்களின் அர்ப்பணிப்புதான் முத்துப்பந்தல் வாகனம்.
நான்காம் நாளான (செப்.26) செவ்வாய் அன்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். கேட்கும் வரம் அருளும் தன்மை கொண்டது கற்பக விருட்சம். கேட்காத வரத்தையும் வாரிவழங்கும் கருணைக் கடல், இந்தக் கடல் வண்ணனான வேங்கடவன். எனவேதான் கற்பக விருட்ச வாகனத்தைக் காண்பது, வரும் பல பெறும் பாக்கியத்தை பக்தர்களுக்குத் தந்துவிடுகிறது. அன்று இரவு நடைபெறும் சர்வ பூபால வாகன சேவை, அரசர்களுக்கெல்லாம் அரசனான வேங்கடவனுக்கு அரசர்களே நடத்தும் அற்புத சேவை. ராஜாவை விஷ்ணுவின் அம்சம் என்பார்கள். பூ பாலர்களான அரசர்களெல்லாம் சேர்ந்து பகவானைத் தம் தோள்களில் தாங்கி திருவீதியுலா எழுந்தருளச் செய்யும் சேவையே இந்த சர்வ பூபால வாகன சேவை.
ஐந்தாம் நாளான (செப்.27) புதன் அன்று காலையில் மோகினி அலங்கார சேவையில் பெருமாள் காட்சி தருகிறார். மயக்கும் மோஹினியாய் மாய வலையில் வீழ்த்தும் மா மாயன் அவன் என பக்தர்க்கு உணர்த்தும் அற்புத சேவை! அன்று இரவே கருட வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். பறவை ஏறும் பரமபுருஷா என்று ஆழ்வார் காட்டுவது போல, கருடாழ்வாரின் மீதேறிப் பெருமாள் வீதியுலா வருவது காண்பதற்கு இனிய ஒன்று. கருடன் பெருமானின் நித்திய வாகனமாய் அமைந்தவர். இந்த சேவையைக் காணவே பக்தர் கூட்டம் அன்று அலைமோதுகிறது.
ஆறாம் நாளான (செப்.28) வியாழன் அன்று காலை ஹனுமத் வாகனத்தில் பெருமாள் வீதியுலா வருகிறார். முதல்நாள் பெரிய திருவடி என்றால் மறுநாள் சிறிய திருவடி எனப் போற்றப் படும் அனுமனின் தோளில் ஏறி வந்து கொடுக்கும் காட்சி. பகவத் பாகவத பக்தர்களில் முதன்மையானவன், ராம நாம மகிமை காட்டும் அனுமன். அடிக்கீழ் அமர்ந்து புகுந்த அனுமன் தோளில் மலையப்பன் வரும் காட்சி கண்கொள்ளக் காட்சிதான்! அன்று மாலை தங்க ரதத்தில் வருகிறார் பெருமாள். இரவு யானை வாகனத்தில் சேவை. யானை என்றால் யானைகளின் அரசன் கஜேந்திரன் நினைவுக்கு வருவார். ஆதிமூலமே என்ற அபயக் குரல் எழுப்பி, வரதப் பெருமானின் கருணையை உலகுக்கு உணர்த்தியவர் கஜேந்திர யானை. எனவே யானை வாகனம் பெருமானை கம்பீரமாகக் காட்டுகிறது.
ஏழாம் நாளான (செப்.29) வெள்ளி அன்று காலை சூர்ய பிரபையில் பெருமான் வீதியுலா வருகிறார். இரவு சந்திர பிரபையில் உலா. ஆண்டாள் திருப்பாவையில், திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்… என்றாள். சூரியனும் சந்திரனும் பெருமானின் இரு கண்களாய் மிளிர்கின்றன. அந்தச் சூரியன் கண்கண்ட தெய்வமாய் காட்சி தருகிறார். சூரிய பிரபையின் ஒளியினூடே சூரிய நாராயணனாக திருவேங்கடவன் எழுந்தருள்கிறான். திருப்பதி தலத்தை சந்திரத் தலம் என்பர். பெருமானை சந்திர பிரபையில் தரிசிப்பது, சந்திர பலத்தைப் பெருகச் செய்யும்.
எட்டாம் நாளான (செப்.30) சனி அன்று காலை பெருமான் திருத்தேரில் பவனி வருகிறார். திருவிழாவின் முக்கிய அம்சம் இதுதான். நம் உடலும் ரதம் போன்றதுதான். ஞானம் புத்தி இவையே இந்த சரீரத்தைச் செலுத்தும் சாரதிகள். ஆன்மாவோ சரீரமாகிய ரதத்தில் குடி கொண்டது. இந்த ரத சாரதியான பேரான்மாவைக் கண்டு கொண்டு சேவித்து அவனடியில் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் எனும் தத்துவத்தை விளக்க வந்தது ரதோத்ஸவம். ரதத்தை இழுத்து, பெருமானுக்கு சமீபத்தில் நம்மைக் கொண்டு செல்கிறது இந்த அனுபவம். அன்று இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். துவாபர யுகத்தில் கேசி எனும் குதிரை வடிவில் வந்தான் அரக்கன். அவனைக் கண்ணன் மாய்த்து கேசவன் எனும் நாமம் கொண்டான். கலியுகத்தில் அக் குதிரையையே வாகனமாகக் கொண்டு பவனி வருகிறான் வேங்கட கிருஷ்ணன். அந்தக் குதிரையில் ஏறித்தான் கல்கி அவதாரத்தையும் பெருமான் எடுப்பான் என்கிறது பாகவத புராணம். அவ்வாறு சிறப்பிடம் பெறும் குதிரை வாகனத்தில் பெருமானை தரிசிப்பது வரப்போகும் ஆபத்துக்களில் இருந்து நம்மைக் காத்தருளும்.
ஒன்பதாம் நாளான (அக்.1) ஞாயிறு அன்று காலை சக்ர ஸ்நானம் நடைபெறுகிறது. ஒரு வேள்வியின் இறுதியில் அவப்ருத ஸ்நானம் அனுஷ்டிக்கப் படுவது போல், இந்த பிரம்மோத்ஸவ வேள்வியின் இறுதியில் அனுஷ்டிக்கப்படுவது இந்த சக்ர ஸ்நானம். அன்று மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவை அடைகிறது.
இப்படி பிரம்மோத்ஸவத்தின் ஒவ்வொரு வாகனக் கோலத்துக்கும் செயலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அவற்றை அறிந்து கொண்டு பெருமானை தரிசித்து நாம் பேரின்பம் அடையலாம்!
– ஸ்ரீ.ஸ்ரீ.
[su_youtube_advanced url=”https://youtu.be/1LOLq0OmDdI” width=”720″ autoplay=”yes” theme=”light”]



