காரைக்குடி:
தேமுதிக.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செப்.,30 விஜயதசமியான இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேமுதிக., நிரந்தரப் பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி தொடர்பாக எத்தகைய முடிவும் எடுப்பதற்கான அதிகாரம் விஜயகாந்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேமுதிக., தலைவராக இருந்த விஜயகாந்த் தற்போது நிரந்தரப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை செயலாளர்களாக சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரை விஜயகாந்த் நியமித்தார். இவ்வாறு காரைக்குடியில் தேமுதிக கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இன்னும் நான்கு நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். அதன்பின் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். பிறகு ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் அமையும். இதை மனத்தில் கொண்டுதான், ஒரு வருடமாக தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காதவர்கள் இப்போது புதிய ஆளுநரை நியமித்துள்ளனர் என்று பேசினார்.