போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் போக்குவரத்து போலீசார் தினமும் மாமூல் வாங்கி வருவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி மற்றும் எல்லீஸ் நகர் பகுதிக்கு செல்வதற்காக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் நடுவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வகையில் இரு நபர்கள் வெள்ளரிக்காய் கடையை தினமும் அமைத்து அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து வியாபாரம் செய்து வருகின்றனராம்.
இதனால் வெள்ளரிக்காய் கடை உள்ள இடத்தில் பலர் வாகனங்களை நிறுத்தி வாங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறதாம் .
இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கவனச் சிதைவு காரணமாக சிறு விபத்துக்குள்ளான வாகன ஓட்டி ஒருவர் அந்த வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் கடையை எடுக்கச் சொல்லி கூறினாராம். அப்போது அந்த கடைக்காரர் கடையை எடுக்க மறுத்து, “நீ வாகனத்தை ஒழுங்காக ஓட்டினால் உனக்கு விபத்து ஏற்படுமா” என தகாத வார்த்தைகளால் திட்டினாராம் .
இதுகுறித்து அப்பகுதியிலுள்ள சிக்னல் அருகில் பணியாற்றும் போக்குவரத்து போலீசிடம் புகார் தெரிவிப்பேன் என அந்த வாகன ஓட்டி கூறினாராம். அப்போது அந்த கடைக்காரர் அங்கு பணியாற்றும் போக்குவரத்து போலீசார் தினமும் என்னிடம் மாமூல் வாங்கிக் கொண்டுதான் இங்கு கடையையே போட அனுமதித்துள்ளார்கள் என்றும் உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது எனக் கூறி உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்றும் கூறினாராம்.
போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை தடுக்க வேண்டிய போலீசாரே மாமூல் வாங்கிக் கொண்டு அதனை கண்டுகொள்ளாமல் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கின்றனரோ ?
செய்தி: அருண் குமார்



