தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் அருகே உள்ள பஜார் பள்ளிவாசலில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே உள்ள அம்மன் சன்னதியில் அமைந்துள்ள பஜார் பள்ளிவாசல் கட்டிடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலத்தில் உள்ள கடைகள் இஸ்லாமிய வியாபாரிகள் வசம் சென்றதாகவும், இதனால் அவர்கள் அங்கு பஜார் பள்ளிவாசல் நிறுவி தொழுகை நடத்தி வந்தாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இப்பள்ளிவாசலின் மேற்கூரை சேதமடைந்திருப்பதாகவும் அதை பராமரிக்கவும் அனுமதி கோரி கடந்த 2014ஆம்ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காஜாமைதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் அந்த நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும் அந்த நிலத்தில் புதியதாக கடைகள், பள்ளிவாசல் நிறுவ தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்ற நிலையில் புதிய பள்ளிவாசல், கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டது.
இதே போல அந்த நிலம் இஸ்லாமிய வியாபாரிகளுக்கு சொந்தமானது ஆகவே தடையை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த தடையை நீக்குவது சமம்பந்தமாக வழக்கு மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. அதில் எதிர் தரப்பினர் பள்ளிவாசல் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதால் அதனை கட்டுவதற்கு அனுமதி அளிக்க கூடாது என வாதிட்டார்.
எனவேஅதன் உண்மை நிலையினை அறிய மதுரை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கறிஞர்கள் நிரஞ்சன், ராகவகோபாலன், இந்து அமைப்பின் சார்பில் கார்திக், இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஹாஜா முஹைதீன். நகராட்சி சார்பில் அதிவீரபாண்டியன், இந்து அறநிலைதுறை சார்பில் ராஜா,மற்றும் நில அளவை யாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று தென்காசி வந்தனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் கோவில் இடத்தில் அமைந்துள்ளதா? என்று ஆய்வு மேற்க்கொண்டனர். இந்த ஆய்வுகளை மதுரை உயர்நீதி மன்றத்தில் அறிக்கையாக அவர்கள் சமர்பிக்க உள்ளனர்.
இதன் காரணமாக நகரில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காலை முதல் மாலை வரை தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் உள்ள கடை வீதிகளில் டி.எஸ்.பி.,மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



