
பன்னீர் சோடா வாங்கிக் குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்தி வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்; டிரைவர்.
இவரது மகன் லட்சுமணன், 6. இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். நேற்று மதியம் லட்சுமணனும், இவரது அத்தை மகன் ஓமேஸ்வரனும், 8, சேர்ந்து, வீட்டிற்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில், ‘பிளாஸ்டிக்’ பாட்டிலில் உள்ள பன்னீர் சோடாவை வாங்கிக் குடித்துள்ளனர்.
உடனே லட்சுமணனும், ஓமேஸ்வரனும் ரத்த வாந்தி எடுத்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு லட்சுமணன், ஓமேஸ்வரன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி, புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பன்னீர் சோடா காலாவதியானதா என விசாரிக்கின்றனர்.