
சென்னை அடையாறு ரயில் நிலையத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது உள்ளது. இந்த சம்பவம் அங்கு பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அடையாறு பறக்கும் ரயில் நிலையத்தின் கீழ் தளத்தில், மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற பயணிகள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் பறந்தது . இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.
இந்த ரயில் நிலையம் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும்.
எலும்பு கூடு கிடந்த இடம், ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை எல்லைக்கு உட்பட்ட பகுதியா அல்லது அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியா என்பதில் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் வரை இந்த தகவல் பறந்துள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அபிராமபுரம் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். தடயவியல் துறையினரும், அங்கு விரைந்தனர்.

இதையடுத்து பரிசீலனைக்கு பிறகு, எலும்புக்கூடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்கட்ட தகவல்படி , கண்டெடுக்கப்பட்டது ஒரு ஆண் எலும்புக்கூடு என்று கூறப்படுகிறது. தடயவியல் துறையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேறு எங்காவது கொலை செய்யப்பட்ட நபரின் எலும்பை கூட இங்கே கொண்டு சென்று போட்டனரா அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது பற்றி போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
எனவே ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.