
அண்மை காலத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கக் கடத்தல் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
துபாயில் இருந்து சென்னை திரும்பிய 8 விமானப் பயணிகள், தங்கள் உள்ளாடைகள் உட்பட பல விதங்களில் 9 கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
துபாயில் இருந்து தங்கக் கடத்தல் தொடர்ந்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் அதி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடா நாடான (Gulf country) துபாயில் இருந்து வந்த எட்டு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அந்தப் பயணிகள் எமிரேட்ஸ் விமானம் ஈ.கே 544 (Emirates flight EK 544) வழியாக சென்னை வந்தனர். அவர்கள் பதற்றமாக இருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின்னாக பதிலளித்துவிட்டு விரைந்து செல்ல முயன்றனர்.
பயணிகளின் பொருட்களை பரிசோதித்ததில் பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பேஸ்ட், அவர்களின் ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகளில் பதுக்கி வைத்திருந்த தங்கம் என தங்கக் கடத்தல் விவகாரம் அம்பலமானது.
அவர்களிடம் இருந்து 9 கிலோ அளவிலான 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
இந்தத் தங்கத்தின் மதிப்பு4.5 கோடி ரூபாயாகும். பயணிகளிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எங்கும் யாரும் சுதந்திரமாக சென்று வர முடியாது.
இந்த நிலையிலும் பயப்படாமல் தங்கக் கடத்தல் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாக மூத்த விமான சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு, சர்வதேச விமானங்களின் சேவையும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.



