
செல்போன் சார்ஜர் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவால் இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜியாருள் மியா (20) என்பவர் காஞ்சிபுரம் அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தங்கி ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று வேலை முடிந்தபின்னர் வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள தன் அறைக்கு சென்று செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு படுத்து உறங்கினார். அப்பொழுது சார்ஜர் ஒயரில் ஜியாருள் மியாவின் கைப்பட்டுள்ளது.
இதில் சார்ஜர் ஒயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அவரது கையில் எலெக்ட்ரிக் ஷாக் அடித்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சார்ஜரில் ஏற்பட்ட மின் கசிவால் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.