மதுரை மாவட்டத்தில் பருவமழை காலத்தில் ஒரு வயதிற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் வழக்கத்தை விட அதிகமான மூச்சுதிணறலால் பாதிக்கப்படுவதால் வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் சளி, மூச்சு திணறலால் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.
தினமும் 250 பேர் வரை புறநோயாளியாகவும், 15 பேர் வரை உள்நோயாளியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக 6 மாதத்திற்குட்பட்ட, ஒரு வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நலத்துறைத் தலைவர் பாலசங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மிதமான காய்ச்சலுடன் அதிக இருமல், மூச்சிறைப்புடன் பச்சிளம் குழந்தைகள் வருவது அதிகரித்துள்ளது. வழக்கமாக பெரியோர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாவர்கள் என்ற நிலை மாறி இந்த முறை குழந்தைகள் தான் மூச்சுதிணறலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ‘ப்ளூ’ வைரஸ் தான் காரணம்.
தாய்க்கு சளி பிடித்தாலோ, வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு சளி பிடித்தாலோ காற்றின் மூலம் வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குள்ளும் வெளியேயும் மாஸ்க் அணிவது அவசியம்.
குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுகின்றனர். இக்காய்ச்சலில் குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படாது என்றார்.