விருதுநகரில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் இன்று கைதுசெய்தனர்.
விருதுநகர் அல்லல்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிகிறார்.
அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு 14 வயது, 2வது மகளுக்கு 13 வயது. முதல் மகள் 9ம் வகுப்பும், 2வது மகள் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் விருதுநகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.
இந்த நிலையில் 9ம் வகுப்பு படிக்கும் தொழிலாளியின் மகள் பள்ளியில் வகுப்பை கவனிக்காமல் சோகமாக இருந்திருக்கிறார். இதனை கவனித்தவகுப்பு ஆசிரியை அவரது நோட்டை வாங்கி பார்த்திருக்கிறார். அப்போது அதில், இனியும் வாழக்கூடாது என எழுதி இருந்தார்.
அதுகுறித்து ஆசிரியை, மாணவியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தனக்கு வாழ விருப்பம் இல்லை என தெரிவித்திருக்கிறார். என்ன காரணம் என்று மாணவியிடம் ஆசிரியை கேட்டுள்ளார். அப்போது தனது தந்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியை பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். மாணவியின் நிலை கண்டு மனம் வருந்திய அவர்கள், அதுபற்றி போலீசில் புகார் செய்ய முடிவு எடுத்தனர். மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த அவலம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
மாணவியின் பெற்றோர் இருவரும் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையிலேயே வீடு திரும்புவார்களாம். அக்காள், தங்கை இருவரும் சேர்ந்தே பள்ளிக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி உடல்நலம் பாதித்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நாட்களில் அவரது தந்தை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பாராம். அப்போது அவர் மகள் என்றும் பாராமல் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி தினமும் இரவில் மாணவியின் தாய் மற்றும் தங்கை ஆகிய இருவரும் தூங்கிய பிறகு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் அடித்து பணிய வைத்துள்ளார்.
மேலும் இதுபற்றி யாரிடமாவது கூறினால் தாய் மற்றும் தங்கையை கொன்று விடுவேன் என மிரட்டி இருக்கிறார். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து மாணவியும் அவரது செயல் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை தந்தையின் பாலியல் தொல்லையால் மாணவி அவதிக்குள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில்தான் மாணவியின் செயல்பாட்டை கவனித்த வகுப்பு ஆசிரியை, அவரிடம் விசாரித்தபோது மாணவிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்த தகவல் வெளியானது.
மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு மற்றும் கொலைமிரட்டல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
