சென்னை:
ஜெயலலிதாவிடம் யார் சொல்லி கைரேகை பெறப்பட்டது என்பது குறித்து, சம்பவத்தில் உடன் இருந்த டாக்டர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரவலாக எழுந்த கோரிக்கையை அடுத்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையத்துக்காக, சென்னை எழிலகத்தில் ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகிய, அலுவலக ரீதியாக தொடர்பு கொண்டிருந்த பலர், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என பலருக்கும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று டாக்டர் பாலாஜி, இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் பேரில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது என பாலாஜி தெரிவித்ததாக தகவல் வெளியானது.
ஆனால், இவ்வாறு வெளிவரும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டாக்டர் பாலாஜி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சுகாதாரத் துறைச் செயலாளர் கூறியதன் பேரில் ஜெயலலிதாவிடம் நான் கையெழுத்துப் பெறவில்லை. தேர்தல் ஆணைய விதிப்படியே ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது” எனத் தெரிவித்தார்.



