நெல்லை மண்ணின் மைந்தர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை நெல்லை

சென்னை:

நெல்லை மண்ணின் மைந்தரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ரத்தினவேல் பாண்டியன் தமது 89ஆம் வயதில் இன்று காலமானார்.

கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், முதுமையின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இன்று சென்னை அண்ணாநகர் 6 வது மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

ரத்தினவேல் பாண்டியனின் மனைவி லலிதா கடந்த 2010 மார்ச் 15ஆம் தேதி காலமாகி விட்டார். இவர்களுக்கு சுப்பையா, ராஜேந்திரன், சேகர், கந்தசாமி, காவேரி மணியன் என 5 மகன்களும் லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் சுப்பையா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். 1929-ம் வருடம் பிறந்த இவர், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். தனது திறமையின் காரணமாக முன்னேறிய அவர் 1974ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர், 1988ம் வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1994ல் ஓய்வு பெற்றார்.

நெல்லை மாவட்ட மக்கள் மீது நீங்காத பற்றுக் கொண்டிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் கலாசாரச் செழுமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும், அவரது சொந்த ஊரான திருப்புடை மருதூரில் உள்ள சிவாலயத்தை அதே கலைச் சிறப்பு மாறாமல் புதுப்பித்து, சீர் செய்த பெருமை ரத்னவேல் பாணியனுக்கு உண்டு. அவரது நற்பணிகள் பல நெல்லை மாவட்த்தில் இன்றளவும் பேர் சோல்லிக் கொண்டிருக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் நடந்த சாதி வன்முறையின்போது அந்தப் பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட ரத்தினவேல் பாண்டியன், `படித்த இளைஞர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு இல்லாததன் காரணமாகவே சாதிய மோதல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் இந்தப் பகுதியில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்’ என அரசுக்கு அறிக்கை கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அமரரான ரத்தினவேல் பாண்டியனின் உடலுக்கு நீதித்துறையினரும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.