சென்னை:
நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் என்று கூறி புகார் கொடுக்க, தலைமைச் செயலகத்திற்கே வந்து அரசு மீது புழுதி வாரித் தூற்றுவதா என்று அமைச்சர் ஜெயக்குமார் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஊழல் புகார் கூறும் டிடிவி தினகரனுக்கு ரூ.10 கோடி சொத்து சேர்ந்தது எப்படி என்று அவர் விளக்குவாரா என்றும் கேட்டுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர், இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்து திடீரென முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணிகள் ஏற்றுள்ளார்கள். இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று கூறி திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இருவர் பேரிலும் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவரிடம் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும், டிடிவி தினகரன் பேட்டி குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், எதற்கெடுத்தாலும் கேமரா முன் நிற்பதே டிடிவி தினகரனுக்கு ஃபேஷன் என்றாகி விட்டது. ஊழல் புகார் சொல்பவர்கள், நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே? வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனை மாட்டி விடுவதா? யாரையாவது மாட்டி விடுவதே டிடிவி தினகரனுக்கு வேலையாகிவிட்டது. தலைமைச் செயலகம் என்பது இதயம் போன்ற பகுதி. மக்கள் தங்களின் குறைகளை சுமந்து கொண்டு அங்கு வருவார்கள். அங்கு வந்து அரசு மீது புழுதிவாரித் தூற்றுவதா?
இவ்வளவு பேசும் தினகரனுக்கு ரூ. 10 கோடிக்கு சொத்து வந்தது எப்படி என்று சொல்ல முடியுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.
இதைக் கேட்ட அருகில் இருந்த சிலர், ரூ. 10 கோடி சொத்து வந்தது எப்படி என்றும் ஊடகங்களிடம் விளக்கம் கொடுக்க தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும் வரட்டுமே என்று கூறினர்.
முன்னதாக, கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடுவதை அடுத்து இருவரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்டது.
very good