சென்னை:
நடிகர் ரஜினி காந்துக்குக் கிடைக்கும் விளம்பரம் போல் எங்களுக்குக் கிடைப்பதில்லையே என்று தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினி சொல்லும் அரசியல் கருத்தைத்தான் நாங்களும் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.. ஆனால்… என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார் தமிழிசை. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார்.
மக்களை சார்ந்து தான் அரசியல் என்பதை ரஜினிகாந்த் உணர்ந்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்று ரஜினிகாந்த் கூறுவதை நான் ஏற்கவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு பிரச்னையையும் வெவ்வேறு விதமாக அணுக வேண்டியுள்ளது.
ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் போல் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவருடைய கருத்துக்களைத் தான் நாங்களும் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம். புதிதாக கட்சி தொடங்குவோர் தெளிவாக நடைபோடட்டும். பின்னர் மக்கள் எடை போடுவார்கள்.
தமிழகத்தில் நாங்கள் மாற்று சக்தியாக வருவோம் என்கிறோம். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் தமிழிசை.




