பா.ஜ.க., தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா, இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
ஹெச்.ராஜாவின் இந்தக் கருத்து, தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சியினரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தனது சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை அவர் உடனே நீக்கினார்.
ஆனாலும், தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் உடனே ஹெச்.ராஜாவைக் கைதுசெய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகர திமுக சார்பில் நகர செயலாளர் ரஹீம் தலைமையில் 50க்கும் க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கோஷம் எழுப்பி, அவரது உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர் .