
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது.
கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள ராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் கடந்த ஓரிரு நாட்களாகப் பெய்த திடீர் மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, கடல் கரைப் பகுதியாக இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலும் வறட்சியே நிலவி வருகிறது. இந்நிலையில் வாராதுவந்த மாமழை மக்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்துள்ளது.
அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவில் மினிக்காய் தீவுகள் அருகே மையம் கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும், அரபிக் கடலில் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



