சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளியில் மீண்டும், ஞாயிற்றுக் கிழமை நேற்று அண்ணா அறிவாலயம் வந்தது, கழகத் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
உடல்நலக் குறைவால், கடந்த இரு ஆண்டுகளாக தனது கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார் திமுக., தலைவர் மு.கருணாநிதி. உடல் நல பாதிப்பு ஏற்படும் போது, அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிடுவார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் செயல் திறனுடன் இருப்பதை தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில், அவ்வப்போது சில வீடியோக்கள் பரபரப்பாக வெளியிடப்படும். அண்மையில் மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் வீடியோவும், பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகப் பரவியது.
மேலும், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அண்மையில் கட்சி தொடங்கிய கமல், கட்சி தொடங்குவதற்காகக் கூறிவரும் ரஜினி என பலரும் கருணாநிதியை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். பிரதமர் மோடியும் கூட கருணாநிதியின் இல்லத்துக்கு வந்து அவரை சந்தித்து, அதனை முன்னிட்டு கருணாநிதி தொண்டர்களுடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களும் வெளி வந்தன. இதனிடையே, சில மாதங்களுக்கு முன் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்குச் சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மு.கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்திலிருந்து கிளம்பி அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஓய்வில் இருக்கும் கருணாநிதி இரண்டாவது முறையாக அண்ணா அறிவாலயத்துக்கு வந்ததால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் சிறிது நேரம் இருந்த கருணாநிதி மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், இது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் நேற்று இரவு இணையத்தில் பரப்பப் பட்டது. சமூக வலைதளங்களில் இவற்றைப் பகிர்ந்த சிலர், இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும் தலைவரை அப்படியே சட்டசபைக்கும் கூட்டிட்டு வாங்களேன் என்று கருத்து பதிவிட்டிருந்தனர்.