அய்யா வைகுண்டர் பீடத்தை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் தனது எதிர்ப்பினைப் பதிவிட்டுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் அதில், ஏற்கெனவே தமிழக அரசு கையகப்படுத்தியுள்ள 38635 இந்துக் கோவில்களில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் பராமரிப்பின்றி அழிக்கப்பட்டுள்ள நிலையில் அய்யா வைகுண்டர் அவர்கள் பீடத்தை அரசு கையகப்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது… என்று கூறியுள்ளார்.
அவரது ட்வீட்
ஏற்கனவே தமிழக அரசு கையகப்படுத்தியுள்ள 38635 இந்து கோவில்களில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் பராமரிப்பின்றி அழிக்கப்பட்டுள்ள நிலையில் அய்யா வைகுண்டர் அவர்கள் பீடத்தை அரசு கையகப்படுத்தி முயற்சாப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
— H Raja (@HRajaBJP) March 18, 2018
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் குமரி மாவட்டம், சாமித்தோப்பு தலைமைபதி அருகே இது தொடர்பாக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடைபெற்றது.
தமிழகத்தில் பல இடங்களில் அய்யா வைகுண்டர் வழிக் கோயில்கள் உள்ளன. இந்த அய்யாவழிக் கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டரின் நினைவிடத்தை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இதனை இந்து சமய அறநிலையத்துறையில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா வைகுண்டர் தலைமைப் பதியின் பால பிரஜாபதி அடிகளார் தலமையில் சாமித்தோப்பு தலைமை பதி முன்பு உண்ணாவிரதப் போரட்டம் நடத்தப் பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தமிழக அரசுக்கு தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டார்.