புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஈ.வே.ரா., சிலையில் தலையை துண்டித்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் ஈ.வே.ரா., திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.
இன்று காலை அந்தப் பகுதி வழியாக வந்த பொதுமக்கள், ஈ.வே.ரா. சிலையில் தலை மட்டும் தனியாகக் கீழே கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துண்டிக்கப்பட்ட தலையை ஈ.வே.ரா.சிலையுடன் தற்காலிகமாகப் பொருத்தி வைத்தனர். மேலும், சிலையை சேதப் படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.