
சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தின் வெளியே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படைக் காவலர்கள் கணேஷ் (28), மற்றும் ரகு(29) ஆகியோர் புதன்கிழமை நேற்று தீக்குளிக்க முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் அரசியல் மட்டத்திலும் பெரும் விவாதத்தைத் தோற்றுவித்தது. இந்நிலையில் இன்று இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்கள் இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள், ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் சாதி ரீதியாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், தங்களைப் பணி செய்யவிடாமல் துன்புறுத்துவதுடன், தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்வதாகவும், விடுப்பு கேட்டால் கூட தராமல், தங்களுக்கு மது வாங்கிக் கொடுக்கச் சொல்லி ஆய்வாளர் சீனிவாசன் வற்புறுத்துவதாகவும், இந்தக் காரணங்களால் தாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
பின்னர் திடீரென அவர்கள் இருவரும் தன்கள் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை அப்பகுதியில் நின்றிருந்த காவலர்கள் கவனித்து, ஓடிச் சென்று தடுத்தனர். பின் இருவரும் டிஜிபி அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அறிவுரை கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கூறிய டிஜிபி அலுவலக அதிகாரிகள், இவர்கள் இருவரும் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இவர்கள் தெரிவித்த மற்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானவை என்றும் கூறினர்.
இந்நிலையில், ஆயுதப் படை காவலர்கள் கணேஷ், ரகு இருவரும் மெரினா காவல் நிலைய போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.



