
1,264 தொலைபேசி அழைப்புகள் செய்து, போலீஸாரைத் திட்டித் தீர்த்த நபர் குஜராத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் சிட்டி காவல் துறையினரை மோசமாகத் திட்டுவதற்காகவே 1,264 தொலைபேசி அழைப்புகள் செய்துள்ளவரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் கமாட் (Kamod) என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் போய். இவர், போலீசாருக்கு எதிரான உணர்ச்சியை வளர்த்துக் கொண்டுள்ளார். இதை அடுத்து, மனம் போன போக்கில் அகமதாபாத் சிட்டி காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கியுள்ளார். பெண் போலீசார் எடுத்தால் அவரது வார்த்தைகள் மேலும் தரக் குறைவாக மாறிவிடும்.
எத்தனை முறை இப்படி இவரிடம் திட்டு வாங்கினார்களோ தெரியாது, போலீஸார் எல்லாம் கடும் கடுப்பில் இருந்துள்ளனர். இப்படி திட்டித் தீர்க்கும் நபரை கண்டுபிடிக்க போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை அன்று இந்த கால் வரும் ஐஎம்இஐ நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டனர். IMEI எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அவர் நரோலில் ஒரு தொழிற்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் அகமதாபாத்தில் உள்ள கமோட் கிராமத்தைச் சேர்ந்த ஈஷ்வர் போய் (40) என அடையாளம் காணப்பட்டது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் துணி ஆலை ஒன்றில் அவர் ஒரு செக்யூரிடி கார்டாக பணிபுரிவதும் தெரியவந்தது.
சில வருடங்களுக்கு முன்பு ஈஸ்வருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவருடைய மனைவி அவரை விட்டு விலகியுள்ளார். இந்த ஜோடிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஈஷ்வர் தனியே வசித்து வந்துள்ளார்.
இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 108 அவசர உதவிக்கு இதே போல் கால் செய்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார்.
“போயிக்கு இரண்டு கைபேசி எண்கள் இருந்தன. அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து திட்டியதுடன், அதன் மூலம் குரூர இன்பம் அடைந்துள்ளார். இவரது விவகாரம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியபோது, ஐபிசி பிரிவு 294 பி பிரிவின்படி (வெளிப்படையாக ஆபாச வார்த்தைகளை பேசுவது) அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மூன்று மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம், அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறினர்.



