தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டுடுவேன் என்று அரசு உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் நிலையில் பணிபுரிபவர்களை மிரட்டுவதுண்டு. இப்போது அந்தத் தலைநகரே தண்ணியில்லாக் காடாகிவிட்டால்..? எங்கே டிரான்ஸ்பரை யாருக்கு போடுவது?
இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது பெங்களூரு நகரம். காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடகம் நடந்து கொண்டது. ஆனால், பெங்களூரு நகரையாவது தண்ணீர் தட்டுப்பாடில்லாத நகராக மாற்றினார்களா ஆட்சியாளர்கள் என்றால் அதுதான் இல்லை. பெங்களூரு நகரம் இப்போது கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
அறிவியில் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசனை வழங்கும் அமைப்பு வெளியிட்ட தகவலில், முறையான திட்டமிடல் இல்லாததால், பெங்களூருவின் நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைந்த அளவே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஆழ்துளைக் கிணறுகள் எண்ணிக்கை ஐந்தாயிரத்தில் இருந்து, நான்கு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கான்க்ரீட் கட்டடங்கள் அதிக அளவில் பெருகியதும், நகரம் விரிவாகிக் கொண்டே போவதும், அதன் தேவைக்கு ஏற்ப ஆழ்துளைக் கிணறுகள் அதிகரித்ததும் பெங்களூருவை பெரிதும் பாதித்துள்ளதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. இதன் காரணத்தால், தென்னாப்பிரிக்க தலைநகர் கேப்டவுனை போல், பெங்களூரும் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.
குடிநீர் முழுமையாகத் தீர்ந்து போகும் ‘டே ஜீரோ’ நகரங்கள் பட்டியலில், பெங்களூரும் இடம்பெற்றுள்ளது. பெங்களூருவை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பெரும் நகரான புனேவும் இந்த எச்சரிக்கை நிலையில் உள்ளது. உலக தண்ணீர் தினத்தில் பெங்களூரு பற்றி வெளியாகியுள்ள செய்தி, அந்நகர மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.