காவிரி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவது என தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில், சம்பந்தப் பட்ட நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்தது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடுவில் 5 வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று புகார் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ஆம் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாயின. இதை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் பூதாகாரமாக வெடித்தது.
மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எழுத்து பூர்வமான கருத்துகனை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கூறவில்லை என்றும், ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளதாகவும், அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் யுபிசிங் கூறியதாக செய்தி வெளியானது.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க இயலாது என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சரியான தீர்வாக அமையும் ஒரு திட்டத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், தாம் அவ்வாறு கூறவில்லை என்றும், தங்கள் தரப்பில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் பணிகள் நிறைவடைந்து மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், இது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டிய நிலை இருப்பதால், அதற்குள் இது சாத்தியப்படுமா என்று கேள்வி எழுப்பியதாகவும் விளக்கம் அளித்துள்ளார் யுபி சிங்.
மேலும், இன்று நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்பி வேணுகோபால் கேள்விக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சகம், காவிரி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவது என தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், 4 மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக எம்பி.,க்களுடன் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆலோசனை கூட்டம் தொடங்கினார். பெங்களூருவில் இந்தக் கூட்டம் தொடங்கியது.
இதனிடையே இன்னொரு நடவடிக்கையாக, காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கோரி இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது போல், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தகவல் பிழைகளுக்கு விளக்கம் கேட்டும், அது மேலாண்மை வாரியமா அல்லது திட்டமா என்பது குறித்து விளக்கமாக அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட வேண்டும்!
மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து மார்ச் 29 வரை காத்திருப்பதாக, ஏற்கெனவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கெடு விதித்திருக்கிறார். இதனால் மார்ச் 29 அன்று மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கப் போகிறது என்பதை கவனித்து, மத்திய அரசு இதே போல் திட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்திக் கொண்டிருந்தால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம்.
எப்படியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்று தமிழகத்துக்கு சாதகமான முடிவை மத்திய அரசு எடுத்து வைத்திருந்தாலும், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் அரசும் மத்திய பாஜக., அரசும் ஒரு அதிகாரப் போட்டியை நடத்திக் கொண்டுதான் இருக்கும். காவிரி அரசியல் ஓட்டு வங்கி அரசியலாக மாறிப் போய்விட்டதால், தேர்தல் முடியும் வரை மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான செயல்பாடுகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது!
அந்த வகையில், மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்யவும் இயலாது. அதனால்தான் வாரியமா, அல்லது திட்டமா என்று குழப்பி வருகிறது. அது வாரியம்தான் என்று அரசு உணர்ந்திருப்பதால், மேலும் கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அது முறையிடக் கூடும். இப்படி கர்நாடகத் தேர்தல் வரை கால நீட்டிப்பையே அது விரும்பும்! அதுவரை அரசியல் கட்சிகளும் காட்சிகளும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும்!